Friday, May 28, 2010

கூடாதெனப்பட்ட தேவைகள்

எதுவெல்லாம் கூடாதென்று

எழுதிவைத்தார்களோ

அவையெல்லாம் எனக்குத்

தவறாமல்

தேவைப்படுகிறது



நிறைய நேரங்களில் கோபம் தேவையாய் இருக்கிறது

குனிந்த தருணம் பார்த்து மிளகாய் அரைக்கும் ஜென்மங்களின் மீது

அவ்வப்போது காமமும் தேவையாய் இருக்கிறது

புருஷனின் தேவைக்கு பரிமாறவோ அன்றி,

காலத்தின் அரிப்புக்கு பதில் சொல்லவோ ...

ரகசியமாய் கொஞ்சமேனும் பொறாமை இல்லாவிட்டால்

முன்னேறித் தொலைவது எப்படி?

வம்பு பேசத் தெரியாத வாய்,

உலக விஷயம் மட்டும் எப்படி பேசிக் கிழிக்கும்?

கொஞ்சமேனும் சண்டை போட முடியாவிட்டால்

எல்லா தவறுக்கும் நான் மட்டுமல்லவா காரணமாகிப் போகிறேன்.



இவையெல்லாம் மட்டுமின்றி

கொஞ்சம் சாத்தான், கொஞ்சம் பேய்த்தனம்

கொஞ்சம் வெறுப்பு, கொஞ்சம் கலகம்

கொஞ்சம் வஞ்சம், கொஞ்சம் ஏய்ப்பு

என்று லிஸ்ட் போட்டு சேகரித்துக்கொண்டிருக்கிறேன்



ஆகையால்

எதுவெல்லாம் கூடாதென்று

எழுதிவைத்தார்களோ

அவையெல்லாம் எனக்குத்

தவறாமல்

தேவைப்படுகிறது



நல்ல பையனாய் வளரச்சொல்லி

முன்னோர் சொல்லித்தந்து

நானும் சொல்லி வந்த கதைகளையெல்லாம்

திரும்பப்பெற முடிவு செய்து விட்டேன் ..

ஆம் !

நல்ல ஆன்மாவென்று

பெயரெடுப்பதைக் காட்டிலும்

வாழ்ந்து விடுவது முக்கியமாகிறது.

ஆசைப்படியும், சாமர்த்தியமாயும்

வாழ்ந்து விடுவது

மிக மிக முக்கியமாகிறது...



எதிர் காலத்துக்கு விட்டுச்செல்லலாம்

ஆசைப்படி வாழ்வதே வாழ்வின் சித்தாந்தம் என்று,

சொல்லப்போகும் கதைகளை !



ஆகையால் .....

எதுவெல்லாம் கூடாதென்று

எழுதிவைத்தார்களோ

அவையெல்லாம் எனக்குத்

தவறாமல்

தேவைப்படுகிறது !!

Wednesday, May 26, 2010

முகமூடியும் சௌகர்யமும்

பிறரை வருத்துதல் கூடாது

என்பது புரிந்த நிமிடத்திலிருந்து

முகமூடி அணிவது வழக்கமாகிவிட்டது !



நல்ல மனசு என்று

பிறர் சொல்வதற்காகவும்

சில காரியங்களை

சாதித்துக்கொள்ளவும் கூட

அது பயன்படவே செய்கிறது.



ஆனாலும்....



நான் முகமூடி அணிந்துள்ளேன்

என்று சொல்வதைவிடவும்

எனை சரியாய் பார்க்கும் வல்லமை

பிற கண்களுக்கு இல்லை

என்று சொல்வதில்

மனசுக்கு இன்னும் சௌகர்யம்தான் !

Tuesday, May 11, 2010

தற்செயலாய் ......

தற்செயலாய் தோன்றி


தற்செயலாய் சுழன்று

தற்செயலாய் கரையும்

இந்த பிரபஞ்சத்தின் ...



தற்செயலாய் பிறந்து

தற்செயலாய் வளர்ந்து

தற்செயலாய் இறக்கும்

மனிதம் .......


தற்செயல் குறித்து

சிந்திக்கவும் செய்கிறது

தற்செயலாய் ......

Friday, May 7, 2010

காத்திருப்பின் மேற்படிந்த சாம்பல்

இப்போதெல்லாம் காத்திருப்பதைத்தவிர

வேறு வேலையே இல்லை !!



பொழுது விடிவதற்கும்

பொழுது கவிவதற்கும்

காத்திருக்க வேண்டி இருக்கிறது



பசித்திருப்பதற்கும்

பசியின்றி இருப்பதற்கும்

காத்திருக்க வேண்டி இருக்கிறது



யாரேனும் ஜோக் சொல்வார்களா

சற்று சிரிக்கலாம் என்றேனும் ....

யாரேனும் புலம்புவார்களா

சற்று அட்வைஸ் செய்யலாம் என்றேனும் கூட

சில காத்திருப்புகள் கழிகிறது.



ஜோக்கோ, சிரிப்போ

புலம்பலோ, அட்வைசோ

இல்லை கடும் கோபமோ

எதுவாயினும் ....



அவையனைத்தும்

காத்திருப்பின் மேற்படிந்த

சாம்பலே,

எனும் உண்மையில்

எந்த மாற்றமும்

இப்போதைக்கு இல்லை.

Wednesday, May 5, 2010

உலகம் வேறுமாதிரி இருக்க வேண்டுமென்று எல்லோருக்கும் ஆசை !!!

உலகம் வேறு மாதிரி


இருக்க வேண்டுமென்று

எல்லோருக்கும் ஆசை



வெறுப்புகள் மறைய வேண்டுமாம்

அன்பு மலர வேண்டுமாம்

வாழ்வு செழிக்க வேண்டுமாம்

அமைதி நிலவ வேண்டுமாம்



உலகம் வேறுமாதிரி

இருக்க வேண்டுமென்று

எல்லோருக்கும் ஆசை



நிறைய பணமும் சொத்தும் வேண்டுமாம்

கடலில் கூட மண்ணைக்கொட்டி

நிலம் செய்து வீடு கட்டும்

வசதி வந்து சேர வேண்டுமாம்



உலகம் வேறுமாதிரி

இருக்க வேண்டுமென்று

எல்லோருக்கும் ஆசை



சாகாது இருக்க வேண்டுமாம்

நோயில்லாத உடல் வேண்டுமாம்

வலி என்பதே இல்லாதிருத்தல் வேண்டுமாம்

உண்மையை காணும் வகை வேண்டுமாம்



உலகம் வேறுமாதிரி

இருக்க வேண்டுமென்று

எல்லோருக்கும் ஆசை



எல்லோரும் சண்டை போடுகிறார்கள்

எல்லோரும் திட்டுகிறார்கள்

எல்லோரும் ரத்தம் சிந்துகிறார்கள்

எல்லோரும் சலித்துக்கொண்டே

ஏதேனும் செய்துகொண்டே இருக்கிறார்கள்

உலகத்தை மாற்றியே தீருவதென்று..



ஆமாமாம் .....

உலகம் வேறுமாதிரி

இருக்க வேண்டுமென்று

எல்லோருக்கும் ஆசை !!!

Saturday, May 1, 2010

இடைவிடாமல் ...


கற்றதை நினைவில் வைத்து 
மேற்கோள் காட்ட முடியவில்லை 

இலக்கியத்தின் 
தொலைந்த வார்த்தைகளை 
மீட்டெடுத்து 
கவிதை நயம் பின்னத் தெரியவில்லை 

உலகின் வன்மம் பார்த்து 
கோபம் கொள்ள முடியவில்லை 

உலகையே காப்பேன் என்று 
உறுதி பூண முடிவதில்லை ..


ஆயினும் எழுதத்துடிக்கும் 
விரல்களுக்குப்பின்னே 
மேகத்தின் பின் மறைந்த
சூரியன் போல் 

அன்பையும் வெறுப்பையும் தாண்டின 
ஏதோ ஒன்று 
ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது
இடைவிடாமல் ....

--