Wednesday, June 23, 2010

சீதையின் பார்வையில் --- ராவணனும் அம்னீஷியாவில் விழுந்த மணி ரத்னமும்

இராவணன் -கதைச் சுருக்கம் - ராமாயணம்



Just kidding.

போலீஸ் அதிகாரி (ராமன்) மனைவி சீதையை, வீரையா (சந்தன கடத்தல் வீரப்பன் / ராவணன் ) கடத்துகிறான். கண்டதும் காதல். கடத்துகிறான் கடத்துகிறான் ..கடத்திக்கொண்டே இருக்கிறான் மழைக்கால வனாந்திரம் முழுதும். வனங்களில் மக்கள். வீரையாவை விரும்பும் மக்கள். மேட்டுக்குடி மீது வீரையனின் கோபம், மற்றும் தங்கையின் மானபங்கம் மற்றும் இறப்புக்கான பழிவாங்கல். கடத்தி கொல்ல வேண்டிய தாரகை மீது காதல்.

சீதையை மீட்க ராமன் வருவதும், படையோடு வருவதும், அனுமார் துணையோடு வருவதும்.....தெரிந்த விஷயம். காதல் முற்றி சீதையை கொல்லாமலே....ராமனிடம் விட்டுப்போக ......அக்னிபரீட்சையை கருவியாக வைத்து ராவணனை கொல்லும்சிறு மாற்றம் மட்டும் ராமாயணத்தில் இல்லாத காட்சியாக அரங்கேறுகிறது.



இது ராமாயண தழுவல் கூட இல்லை என்று மணிரத்தினம் சத்தியம் செய்தாலும் .......முதல் காட்சியிலிருந்து.....இராமாயண கதை மாந்தர்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு துவங்கி விடுகிறது.



மணிக்கு அம்னீஷியா வந்ததால் விடுபட்ட இராமாயண காட்சிகளும், நியாயங்களும். சீதையின் பார்வையில்





அம்னீஷியா #1: ராமன் எந்த வில்லத்தனமும் செய்யவில்லை.

வில்லத்தனம் செய்யாத ராமனை என்ன காரணம் சொல்லி வெறுப்பது ?

ராமாயணத்தில் கூட அக்னிபரீட்சைக்குப்பிறகும் ராமனோடு இரண்டு குழந்தைகள் வேறு.

அக்னி பரீட்சைக்காகவெல்லாம் ராமனை வெறுக்க முடியாது.



அம்னீஷியா #2: ராவணனும் எந்த வில்லத்தனமும் செய்யவில்லை, மேலும் எந்த ஹீரோத்தனமும் செய்யவில்லை. அவனை எதற்காக காதலிப்பது என்பது தெரியாமலே.....லவ் டயலாக்-ம் லுக் -ம் செய்ய விட்டா மணி-யை என்ன செய்வது.?

அவனது தங்கையை யாரோ கற்பு -அழித்ததற்கு ( கற்பு அழித்தலா, கர்ப்பம் அளித்தலா ? ...சின்ன சந்தேகம் ) சீனிலேயே வராத ராமன் மீது கோபம் கொண்டு, என்னை ஏன் தூக்கிவர வேண்டும்?

நான் அழகாய் இருப்பதாலா? சீனிலேயே வராத ராமன் மீது , எனக்கு மட்டும் எப்படி கோபம் வரும்? எனக்கு இராவணன் மேல் காதல் வரவேண்டும் என்றால், ராமனை வில்லனாக்க....வேண்டுமென்றே மறந்த மணியை என்ன செய்யலாம் ?

மேலும் கடைசிவரை என்னை தூக்கிவந்த காரணம் மட்டும் பிடிபடவே இல்லை.



அம்னீஷியா #3 : சரி ராவணன் தான் ஹீரோ ஆயிற்றே... அவனுக்கு பத்துதலை பத்து ஆளுமை என்று பத்து பேரை விட்டு விளக்கம் சொன்னதுக்கு பதில் விக்ரமை கொஞ்சமாவது நடிக்க விட்டிருக்கலாமே.....டண்டனக்க, பக் பக் பக் பக் என்றெல்லாம் உளறாமல் கொஞ்சம் நடிப்பையாவது காட்ட வாய்ப்பு இருந்திருக்கும்.



அம்னீஷியா #4 என்னை (சீதை) பார்த்தவுடன் "உசுரே போகுதே" என்று உருகும் இராவணன் -- நம்புவதற்கில்லை. இடைவேளைக்கு அப்புறம் உருகி இருந்தாலாவது கொஞ்சம் நம்பலாம்.



அம்னீஷியா #5 மரத்துக்கு மரம் தவ்வும் அனுமார் கார்த்திக் : அய்யோ பாவம் ....இது ஒன்றே போதும் மணிக்கு என்னவோ ஆகிவிட்டது என்பதை காண்பிக்க.



அம்னீஷியா #7 ஏன் கும்பகர்ண பிரபு தூங்க வில்லை?

8; ஏன் விபீஷணன் ராமனின் கட்சிக்கு தாவவில்லை?

9;ஏன் "ரோஜா " படம் போலவே சீதா இருந்த இடத்தை தேடி வந்த ராமன் தடவி பார்க்கிறான்?

10: ஏன் ரோஜா படம் போலவே கிளைமாக்ஸ் தொங்கு பாலம்?

11; மீசை இல்லாததாலேயே ப்ரித்வி ராமனா?

12: தீவிரவாதி என தேடப்படும் ராவணன் ....ஏன் கண் முன்னாள் ஏன் யாரையும் கொல்லவேயில்லை?

13: தங்கையின் மரணத்துக்கு காரணமானவர்களை கிடைத்தபிறகும் விட்டு விட்டு .....என்னை மட்டும் கொள்ளப்போகிறேன் என்று பயமுறுத்திக்கொண்டே இருப்பது ஏன்?



ராவணன் என்று பெயர் வைத்து ராவணனின் செயல்களை நியாயப்படுத்தவோ அல்லது சொல்லாத அந்த மனதை சொல்ல வேண்டும் என்றோ மணி ஆசைப்பட்டிருக்கும் தருணத்தில்....

அதற்கான வலிமை இல்லாது போய்விட்டது. ராமனை கெட்டவன் என்று காட்டாவிட்டாலும், ராவணனது காதலை வலிமை நிறைந்ததாய், தீவிரம் நிறைந்ததாய் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வலிமையையும் தீவிரமும் சீதையின் மனசில் தீயை பெருகி நிறைய வேண்டிய அவசியமும் இருக்கிறது. அதில் முழுமையாய் வெற்றி பெறவில்லை இந்த ராவண காவியம். புரியாத வசனங்கள் (ரெகார்டிங்) அழுத்தம் குறைந்த வசனங்கள் ( சுகாசினி ) -மேலும் பலவீனம்.



இது ராமாயண தழுவல் என்று சத்தியம் சொல்லி மறுத்துக்கொண்டிருக்கும் மணி ரத்னம், ராமாயண கதாபாத்திரங்களை அளவுக்கதிகமாய் கதையில் உலவவிட்டு, அதன் உள்ளீட்டை நீர்த்துப்போக விட்டு விட்டார். ராவணனுக்கும் சீதைக்கும் நியாயம் செய்யப்படவில்லை.

இதற்கு "ராமன்" என்றே பெயர் வைத்திருக்கலாம்.



மொத்தத்தில் ராமாயணத்தை அப்படியே விட்டிருக்கலாம். இவ்வளவு நேர மற்றும் பண விரயம்

தேவையில்லை.



இத்தனைக்கு பிறகும் ............... ....மூன்று மணி நேரம் எப்படி பொழுது போனதெனில்.......



என் கையில் இருந்த பனானா, ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தியும்.......ஈரம் சொட்டும் பச்சை வனங்களும், மணியின் சொதப்பலை மீறி நடிக்கத் தெரிந்த நடிகர்களும், நல்ல இசையும்.

Sorry Mr. Mani Ratnam ----Next time ony DVD. Feel bad for Vikram as I watched him hoping for awards.

Monday, June 21, 2010

தேவையான நட்பு

கருத்துகளை மாற்றிக்கொள்ளாமல்

தான் பிடித்த முயலுக்கு

மூன்றே கால் என

பிடிவாதமாய் இருப்பவர்கள் --

மிகவும் சிரமம்

இவர்களிடம் பேசாமலே இருந்துவிடலாம்.



என்னோடு ஒத்த கருத்துகள் உள்ளவர்கள்

நல்லவர்கள் வல்லவர்கள் --

ஆனாலும் எதைப் பேசினாலும்

நானும் ஆமோதிக்கிறேன் என்று

ஒத்து ஊதினால்

அதற்கு மேல் பேச என்னதான் இருக்கிறது?



ஆகக்கூடி எனக்கு தேவையானவர்கள்

சிறிது நேரமேனும்

எனக்கு எதிராய் பேசி

முடிவில் என்னிடம் தோற்றே ஆகவேண்டிய

இனிதான நட்புகள்....



அதுவே

ஆயின் .....தொடர்பு கொள்க.

Thursday, June 17, 2010

தன்னைத்தானே எழுதிக்கொண்ட கவிதை

கவிதை தன்னைத் தானே எழுதிக்கொள்ளும்


கவிதைவரிகள்

பத்துபேருக்கு...

பத்துவிதமாய் புரிதலில்

கவிதை பல தளங்களில் வாழ்கிறது

கவிஞனின் எண்ணம் தாண்டியும்

வார்த்தைகள் பலவண்ணம்

கொள்ளும்போது

கவிதை தன் மோட்சத்தை அடைகிறது.

நேற்று படித்த ஞாபகம்.





இன்று ....

வரிகள் பத்தை பொறுக்கி எடுத்து

கலயம் தேடி குலுக்கிப் போட்டு

வரிசையாய் எடுத்து எழுதப்போகிறேன்

பலதளம் வாழும் கவிதை ஒன்றை.



பத்துபேர் பத்துவிதமாய் அர்த்தம் கொள்ள...



தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் கவிதைகளும்

தன்னைத்தானே வரைந்து கொள்ளும் ஓவியங்களும்

நன்றாகத்தான் இருக்கிறது.



வார்த்தைகள் தேடியும்

கருத்துகள் புனைந்தும்

ஏனிந்த கஷ்டம் ???

சந்தம் சொல்லும் வார்த்தைகளை

பொறுக்கிப்போடும்

சாப்ட்வேர் கிடைக்கட்டும்.

யோசிப்பது மிச்சமாகும் .







--

Wednesday, June 16, 2010

என்னைபார்த்து நானே வியந்துதான் போகிறேன்

வெகு அழகாய் உருவம்


உலகை உள்வாங்கும் அறிவு

அவ்வறிவை வெளிப்படுத்தும் ஆற்றல்

பகைமை கொள்ளாத  நேசம்

சார்ந்து விடாத பாசம்

ஆமாமாம்

என்னைபார்த்து நானே வியந்துதான் போகிறேன்



கருத்தான விவாதங்கள்

அறிவு ததும்பும் நட்புகள்

பிறர்க்கு உழைக்கும் பேச்சுக்கள்

வெகுசிலரே படிக்கும் நூல்கள்

என்று என் உலகம்

மிகவும் உயர்ந்ததாய் இருக்கிறது !!



உதவி செய்யும் கரங்கள்

மன்னிக்கும் மனது

ஓயாத உழைப்பு

தாராள சிரிப்பு

ஆம் ...இந்தப் பெருமை அளப்பரியதாயிருக்கிறது.



நான் எனும் மூர்க்கம்

பாம்பைப்போல் சீற்றம்

தனிமை என்னும் பாரம்

உறுதி எனும் வாழ்வு

உயர்வு பெருமை வியப்பு ஏதுமில்லை



கண்கள் நிலைக்கிறது

வெளி, வெளி பெருவெளி

ஏதுமில்லாப் பெருவெளி

Friday, June 11, 2010

டீ - கால தத்துவங்கள்

சாயங்கால வானம் பார்த்து

டீ அருந்தினால்

-----அழகியல்



குடித்ததும் நானே அதை

கழுவி கவிழ்த்தால்

------இருத்தலியல்



தூளும் பாலும் சர்க்கரையும்

சேர்ந்து டீ உருவானால்

-------வேதியியல்



அடுப்பை பற்ற வைத்தலால்

வெம்மை உருவானால்

-------இயற்பியல்



அடுப்பு பற்ற வைக்குமுன்

விளக்கேற்றி

கைகளை குவித்தால்

--------கடவுளியல்



கைகளை குவிக்கக்கூடாது

என்பதை நினைத்துக்கொண்டால்

--------கடவுள் இல்லா இயல்



கைகளை குவிக்கக்கூடாது

என்பதை தீவிரமாக நினைத்துக்கொண்டால்

--------பெரியாரியல்



கைகளோ, விளக்குகளோ

ஞாபகமே இல்லாவிட்டால்

---------

---------

--------- அது.... மறதியியல்.

Thursday, June 10, 2010

விக்ரமாதித்தனின் அரியணைகள்

அரியணை மேலிருந்து

தர்ம புத்தி கொண்ட

குருவியோட்டிக்கும் எனக்கும்

பெரிய வித்யாசமில்லை.



அரியணையில் ஏறுவதும் இறங்குவதுமாகவே

ஒவ்வொரு பொழுதும் கழிகிறது



அரியணை இன்பம்

புரியாத மயக்கம்

எப்பொழுதும் தொடர்கிறது



இறங்கின இன்பம்

புரியாத மயக்கம் கூட

அவ்வப்போது தொடர்வதுண்டு.



எல்லோருக்கும் கிடைத்திருக்கும்

கூடவே தூக்கித்திரியும் படியான

விக்ரமாதித்தனின் அரியணைகள்.



(குருவியோட்டி அரியணை இருந்த பூமியில் நின்றபோது, சுற்றிலும் நல்லதும், இன்பமும் கண்டான், அரியணை விட்டு நகர்ந்த போதோ தன்னை மட்டுமே கண்டான்)