Wednesday, April 28, 2010

காத்திருத்தல்


உனக்கு அனுப்பின என் கவிதை
குறித்து
நீ ஏதும் சொல்வாயென
சில சமயம் காத்திருந்ததுண்டு.
 
ஆனாலும் இப்போது தெரிகிறது
அபிமானத்தால் விளைந்த
உனது கருத்து தேவையில்லை என்பது.
 
அபிமானம் கொண்ட உன் கண்கள்  மட்டுமின்றி 
கவிதை படிக்கிற
எந்த கண்களும் கவிதையை 
உயர்ந்ததாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ
அளவிட முற்படுகிறது
(நன்றாயிருக்கிறது என்றோ அல்லது அப்படி இல்லை என்றோ )
.
 எல்லாத் தருணங்களிலுமோ 
அல்லது ஏதேனும் ஒரு தருணத்திலோ
உயர்ந்ததும் தாழ்ந்ததும் ஒரு தளத்தில்
சந்தித்து விடுவதை வழக்கமாகவே கொண்டிருக்கின்றன.

அவை தமக்குள் சந்தித்து 
வெறுமையை உண்டாக்குகிற 
அதே நேரத்தில் , 
என் கவிதையின் சாரமும் 
அதற்குள் தொலைந்து விடுவதை 
மறுப்பதற்கில்லை. 
 
ஆகவே, கவிதை பற்றின
உன் கருத்து குறித்து இப்போது மட்டுமல்ல ...
எப்போதுமே காத்திருக்கத் தேவையில்லை.



Monday, April 26, 2010

நண்பகற் புழுதி


வேலையின்றி சோம்பியிருந்த
ஒரு நாளின் பகற்பொழுதில்
தலைக்கு மேல் தென்னங்கீற்றும்
அதற்கு மேல் வானமும் தென்பட
உடலை தாங்கின கட்டிலும்
மொத்தமாய் தழுவின தென்றலுமாய்
கிறங்கின வேளையில்,
 
ஓடிவந்த என் குழந்தை எத்தியதில்
தெறித்தது அருகிருந்த மண்மேடு.
 
புழுதியாய் படலம்..
மாவுபோல் மண்துகள் ,
சற்று பெரிதாக சிறு கற்களும்,
ஆங்காங்கு கலந்த குப்பைகளும்,
மரத்துகள்கள், இலை துணுக்குகள்
சில குச்சிகள் 
சிறிதும் பெரிதுமாய் ...
 
மண்மேட்டிலிருந்து விடுபட்டு 
எதை  நோக்கியோ அவை பறப்பவை 
போலிருந்தன.
ஒன்றை ஒன்று விட்டு விலகுவது  போலும்   
தோற்றமளித்தன
மேட்டிலிருந்து விடுபட்ட வேகத்திலோ
அல்லது மகிழ்ச்சியிலோ
அவை சுழன்றாடின.
 
சில அருகிலும் சில தூரத்திலுமாக
மிக மிக அருகில் இருந்து பார்த்தபோது
அவை காலம் காலமாக,
காலமில்லா காலம் தொட்டு
இருந்தாடிக்கொண்டிருப்பவை
போலும்கூட தோன்றலாயின.
 
எல்லாம் சில நொடிகள்தான் ...
கண்ணை மூடித்திறந்த போது ..
எழுந்த புழுதி, பறந்து, விரவி
மற்றோர் இடத்தில் விழுந்திருந்தது.
மீண்டும் மண் தரையினூடே
கலந்தும் இருந்தது.
 
குழந்தை கடந்தோடிய பின்
வெயிலும், தென்னையும்
காற்றும், கட்டிலும்
நானுமாய் .......
 

Thursday, April 22, 2010

டீ கெட்டிலின் அகிலம்



 
அழகாய் கவிந்து கொண்டிருக்கிறது மாலை !
கெட்டிலில் தண்ணீருடன் சேர்ந்து
டீத்தூளும் கொதிக்கிறது
மனம் நாசியை வருடுகிறது
அதில் லயித்து
சுவரில் வாகாய் சாய்ந்து
கொதித்தலை வெறிக்கிறேன்.
 
சிறு சிறு கருக்கோளங்கள் 
சில தனியாய் அலைந்தபடி
சில ஒட்டி உறவாடியபடி
சில அவ்வப்போது இணைந்தும் விலகியும்
சில அவ்வப்போது உரசியும், மோதியும்
மற்றும் சிலவோ எப்போதும் கும்பலாய்
மிதந்து நகர்ந்தபடி
அவை ஒரு ஒழுங்கில் பயணிப்பது போலக்கூடத் தோன்றுகிறது.
 
வேடிக்கைதான் !!!
 
அடுப்பின் வெம்மையை கூட்டிப்பார்க்கிறேன்
பிறகு சிறிது குறைத்தும் பார்க்கிறேன்.
அவை முதலில் வேகமாகவும்
பிறகு மெதுவாகவும் நகர்கின்றன.
முற்றிலும் அடுப்பை அணைத்தபோது
கனம் தாங்காதவை போல
கெட்டிலின் ஆழத்திற்கு சென்று
கூட்டமாய், மொத்தமாய் அமர்ந்து கொண்டன.
 
நானும் அவற்றை எனது டீயிலிருந்து வடிகட்டி
குப்பையில் எரிந்து விட்டு...
பாலும் சர்க்கரையும் கலந்து
மாலையோடு கை கோர்த்து
டீ அருந்த துவங்குகிறேன். 

Friday, April 16, 2010

அப்படியும் இப்படியும் எப்படியும் !!!

கொஞ்சம் இப்படியும் இருக்குமடி உலகம்


நெனைச்சு அப்படியும் இருக்குமடி உலகம்





எப்படியும் நடக்குமடி உலகம் -தெரிஞ்சும்

எப்படியும் நடக்குமடி உலகம் .





கோடு போட்டு நிக்காதடி உலகம்

பெரிய ரோடு போட்டும் போகாதடி உலகம்





புத்தனையும் பாத்ததடி உலகம்

பல சித்தனையும் பாத்ததடி உலகம்





ஏசுவோ, அல்லாவோ

ஹிட்லரோ, நீட்சேவோ

வீரப்பனோ, ஒபாமாவோ

நீயுமோ, நானுமோ...





அத்தனையும் பாக்குதடி உலகம் ....

அதையும் நிக்காம பாக்குதடி உலகம் ...





கயிறு போட்டு தண்ணியத்தான் கட்டப்பாக்குறான் -மனுஷன்

காத்த புடிக்க வலையத்தான் வீசிப்பாக்குறான் .





இல்லாத தூரத்த அளந்து பாக்குறான் -மனுஷன்

கைக்குள்ள அகிலத்த அடக்கப் பாக்குறான்





போற வழி வர்ற வழி போட்டு வைக்கிறான்-அதுவும்

திரும்பும்போதே மறைஞ்சு போக மலைச்சு போகுறான் ..









இப்படித்தான் இருக்கணும் ....

அப்படித்தான் இருக்கணும் ....

மனசு கெடந்து அடிக்குதடி

காலம் முழுசும் ....





இப்படின்னும் இல்லாம ...

அப்படின்னும் இல்லாம ...

எப்படியும் இருக்குதடி இந்த உலகம் ...

அதில ....

எப்படியும் இருந்துக்கடி காலம் முழுசும் ...

அகில ...

உலகத்தோடு ஒத்துப்போடி சாகும் வரைக்கும் .....

Thursday, April 15, 2010

சிரித்துக்கொண்டே இருக்கிறது ....

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......(கால நதி )

இதுதான் இலக்கியம் என ஒரு கூட்டம் 
இதுதான் மதம் என மறு கூட்டம் 

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

இப்படித்தான்  வாழ்க்கை என ஒரு வழி 
அப்படித்தான்  வாழ்க்கை என மறு வழி 

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

இதுதான் மனிதம் என ஒரு வழக்கு 
இது ஒரு மிருகம் என மறு வழக்கு ..

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

உனக்கு ஒரு நியாயம் 
எனக்கு ஒரு நியாயம் 
மற்ற அனைவர்க்கும் ஒரே நியாயம் ..

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

இது புனிதம் 
இது குப்பை 
இது மேதமை 
இது மடமை
இது கடவுள் 
இது சாத்தான் 
இது மோட்சம் 
இது நரகம் 
இது பாவம் 
இது புண்ணியம் 
இது கல் 
இது உயிர் 
நீ நீ ...
நான் நான் ... 

வரையறை இல்லா உலகில் ...
வரையறை கற்கும்  மனிதம் 
விதிகளே இல்லா வீதியில் 
விதிகளை விதிக்கும் மனிதம் ...

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

சிரித்துக்கொண்டே இருக்கிறது ....

Thursday, April 1, 2010

சாக்காடு தேடிவரும் !!

வந்தது கருவுல


போறது எதுவர?

யாருக்கும் தெரியல

தேடலும் நிக்கல !!!



நேத்து நடந்தது

நாளைக்கு நடப்பது

ஏன்னு தெரியணும்

எதுக்குன்னு புரியணும் !



அன்பு வச்சாலும் கேள்வி

வைக்காட்டியும் கேள்வி

நம்புனாலும் கேள்வி

நம்பாட்டியும் கேள்வி !



காசு வந்தாலும் கேள்வி

வராட்டியும் கேள்வி

செத்தாலும் கேள்வி

சாக அடிச்சாலும் கேள்வி !



ஒருநாள் பொழப்புக்கு

யோசிச்சவன் முட்டாளு

பலநாள் பொழப்புக்கு

யோசிச்சவன் புத்திசாலி !



ஆயுளுக்கும் சேத்துவச்சு

யோசிச்சவன் அறிவாளி

யுகத்துக்கும் பொறுப்பெடுத்து

யோசிச்சவன் ஆன்மீகி !



இந்த நொடி சந்தோஷத்தை

ஒருநாளும்,  பலநாளும்

ஆயுளும், யுகமுமாய்

யோசிச்சு தொலைச்சுட்டு,



என்ன பேரெடுத்தா

யாருக்கு என்ன வரும்?

அலுப்பும் சலிப்பும்தான்

சாக்காடு தேடிவரும் !