Thursday, November 11, 2010

என் தமிழ்
என் தனிமைக்கு தமிழை பிடித்திருக்கிறது ! 

என் உணர்வுகள் 
தள்ளி நிற்கையில் 
தமிழ் வாய் மூடி 
சிரிக்கிறது. 

தமிழை தழுவும்
விரல்களினூடாக
பரவசம் 
ஆன்மாவில் ஊடுருவுகிறது 

பரவசத்தின் ஊற்றில் 
மனிதர்களும் 
கனவுகளும் 
சிதறுகிறது  


எத்தனை முறை 
தொலைந்து போனாலும் 
மீண்டும் மீண்டும் 
என்னை கண்டெடுக்கிறது 
என் தமிழ். 

கண்டெடுக்கும் போதெல்லாம் 
கண் பார்த்து சொல்கிறது 
உன் தனிமை எனக்கு பிடித்திருக்கிறதென்று ! 

Wednesday, October 20, 2010

வாசமும் மோட்சமும்

கவிதைகளுக்கு நேரமில்லை .
இலக்கிய சேவைக்கும்,
இப்போது இடமில்லை

வளரும் நட்புகளின்
மனங்களின் வாசத்தில்
கவிதைகள் கரைகின்றன

நட்புகள்  மனம் படிக்க
விரைகின்றன.

எதுவாயினும்
பழைய காமிக்ஸ் புக்கின்
மயக்கும் வாசத்தைபோல
என் ப்ளாக் ம்
வாசம் வீசுகிறது...
விட்டுப்போன சில நாட்களுக்குள்ளாகவே.

மயக்கம் விரல்களின் வழி வழிந்து
கவிதையாகும்
மோட்சம்.பழைய புத்தகத்திற்குள்
புதிய பேப்பர்
:)

Wednesday, June 23, 2010

சீதையின் பார்வையில் --- ராவணனும் அம்னீஷியாவில் விழுந்த மணி ரத்னமும்

இராவணன் -கதைச் சுருக்கம் - ராமாயணம்Just kidding.

போலீஸ் அதிகாரி (ராமன்) மனைவி சீதையை, வீரையா (சந்தன கடத்தல் வீரப்பன் / ராவணன் ) கடத்துகிறான். கண்டதும் காதல். கடத்துகிறான் கடத்துகிறான் ..கடத்திக்கொண்டே இருக்கிறான் மழைக்கால வனாந்திரம் முழுதும். வனங்களில் மக்கள். வீரையாவை விரும்பும் மக்கள். மேட்டுக்குடி மீது வீரையனின் கோபம், மற்றும் தங்கையின் மானபங்கம் மற்றும் இறப்புக்கான பழிவாங்கல். கடத்தி கொல்ல வேண்டிய தாரகை மீது காதல்.

சீதையை மீட்க ராமன் வருவதும், படையோடு வருவதும், அனுமார் துணையோடு வருவதும்.....தெரிந்த விஷயம். காதல் முற்றி சீதையை கொல்லாமலே....ராமனிடம் விட்டுப்போக ......அக்னிபரீட்சையை கருவியாக வைத்து ராவணனை கொல்லும்சிறு மாற்றம் மட்டும் ராமாயணத்தில் இல்லாத காட்சியாக அரங்கேறுகிறது.இது ராமாயண தழுவல் கூட இல்லை என்று மணிரத்தினம் சத்தியம் செய்தாலும் .......முதல் காட்சியிலிருந்து.....இராமாயண கதை மாந்தர்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு துவங்கி விடுகிறது.மணிக்கு அம்னீஷியா வந்ததால் விடுபட்ட இராமாயண காட்சிகளும், நியாயங்களும். சீதையின் பார்வையில்

அம்னீஷியா #1: ராமன் எந்த வில்லத்தனமும் செய்யவில்லை.

வில்லத்தனம் செய்யாத ராமனை என்ன காரணம் சொல்லி வெறுப்பது ?

ராமாயணத்தில் கூட அக்னிபரீட்சைக்குப்பிறகும் ராமனோடு இரண்டு குழந்தைகள் வேறு.

அக்னி பரீட்சைக்காகவெல்லாம் ராமனை வெறுக்க முடியாது.அம்னீஷியா #2: ராவணனும் எந்த வில்லத்தனமும் செய்யவில்லை, மேலும் எந்த ஹீரோத்தனமும் செய்யவில்லை. அவனை எதற்காக காதலிப்பது என்பது தெரியாமலே.....லவ் டயலாக்-ம் லுக் -ம் செய்ய விட்டா மணி-யை என்ன செய்வது.?

அவனது தங்கையை யாரோ கற்பு -அழித்ததற்கு ( கற்பு அழித்தலா, கர்ப்பம் அளித்தலா ? ...சின்ன சந்தேகம் ) சீனிலேயே வராத ராமன் மீது கோபம் கொண்டு, என்னை ஏன் தூக்கிவர வேண்டும்?

நான் அழகாய் இருப்பதாலா? சீனிலேயே வராத ராமன் மீது , எனக்கு மட்டும் எப்படி கோபம் வரும்? எனக்கு இராவணன் மேல் காதல் வரவேண்டும் என்றால், ராமனை வில்லனாக்க....வேண்டுமென்றே மறந்த மணியை என்ன செய்யலாம் ?

மேலும் கடைசிவரை என்னை தூக்கிவந்த காரணம் மட்டும் பிடிபடவே இல்லை.அம்னீஷியா #3 : சரி ராவணன் தான் ஹீரோ ஆயிற்றே... அவனுக்கு பத்துதலை பத்து ஆளுமை என்று பத்து பேரை விட்டு விளக்கம் சொன்னதுக்கு பதில் விக்ரமை கொஞ்சமாவது நடிக்க விட்டிருக்கலாமே.....டண்டனக்க, பக் பக் பக் பக் என்றெல்லாம் உளறாமல் கொஞ்சம் நடிப்பையாவது காட்ட வாய்ப்பு இருந்திருக்கும்.அம்னீஷியா #4 என்னை (சீதை) பார்த்தவுடன் "உசுரே போகுதே" என்று உருகும் இராவணன் -- நம்புவதற்கில்லை. இடைவேளைக்கு அப்புறம் உருகி இருந்தாலாவது கொஞ்சம் நம்பலாம்.அம்னீஷியா #5 மரத்துக்கு மரம் தவ்வும் அனுமார் கார்த்திக் : அய்யோ பாவம் ....இது ஒன்றே போதும் மணிக்கு என்னவோ ஆகிவிட்டது என்பதை காண்பிக்க.அம்னீஷியா #7 ஏன் கும்பகர்ண பிரபு தூங்க வில்லை?

8; ஏன் விபீஷணன் ராமனின் கட்சிக்கு தாவவில்லை?

9;ஏன் "ரோஜா " படம் போலவே சீதா இருந்த இடத்தை தேடி வந்த ராமன் தடவி பார்க்கிறான்?

10: ஏன் ரோஜா படம் போலவே கிளைமாக்ஸ் தொங்கு பாலம்?

11; மீசை இல்லாததாலேயே ப்ரித்வி ராமனா?

12: தீவிரவாதி என தேடப்படும் ராவணன் ....ஏன் கண் முன்னாள் ஏன் யாரையும் கொல்லவேயில்லை?

13: தங்கையின் மரணத்துக்கு காரணமானவர்களை கிடைத்தபிறகும் விட்டு விட்டு .....என்னை மட்டும் கொள்ளப்போகிறேன் என்று பயமுறுத்திக்கொண்டே இருப்பது ஏன்?ராவணன் என்று பெயர் வைத்து ராவணனின் செயல்களை நியாயப்படுத்தவோ அல்லது சொல்லாத அந்த மனதை சொல்ல வேண்டும் என்றோ மணி ஆசைப்பட்டிருக்கும் தருணத்தில்....

அதற்கான வலிமை இல்லாது போய்விட்டது. ராமனை கெட்டவன் என்று காட்டாவிட்டாலும், ராவணனது காதலை வலிமை நிறைந்ததாய், தீவிரம் நிறைந்ததாய் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வலிமையையும் தீவிரமும் சீதையின் மனசில் தீயை பெருகி நிறைய வேண்டிய அவசியமும் இருக்கிறது. அதில் முழுமையாய் வெற்றி பெறவில்லை இந்த ராவண காவியம். புரியாத வசனங்கள் (ரெகார்டிங்) அழுத்தம் குறைந்த வசனங்கள் ( சுகாசினி ) -மேலும் பலவீனம்.இது ராமாயண தழுவல் என்று சத்தியம் சொல்லி மறுத்துக்கொண்டிருக்கும் மணி ரத்னம், ராமாயண கதாபாத்திரங்களை அளவுக்கதிகமாய் கதையில் உலவவிட்டு, அதன் உள்ளீட்டை நீர்த்துப்போக விட்டு விட்டார். ராவணனுக்கும் சீதைக்கும் நியாயம் செய்யப்படவில்லை.

இதற்கு "ராமன்" என்றே பெயர் வைத்திருக்கலாம்.மொத்தத்தில் ராமாயணத்தை அப்படியே விட்டிருக்கலாம். இவ்வளவு நேர மற்றும் பண விரயம்

தேவையில்லை.இத்தனைக்கு பிறகும் ............... ....மூன்று மணி நேரம் எப்படி பொழுது போனதெனில்.......என் கையில் இருந்த பனானா, ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தியும்.......ஈரம் சொட்டும் பச்சை வனங்களும், மணியின் சொதப்பலை மீறி நடிக்கத் தெரிந்த நடிகர்களும், நல்ல இசையும்.

Sorry Mr. Mani Ratnam ----Next time ony DVD. Feel bad for Vikram as I watched him hoping for awards.

Monday, June 21, 2010

தேவையான நட்பு

கருத்துகளை மாற்றிக்கொள்ளாமல்

தான் பிடித்த முயலுக்கு

மூன்றே கால் என

பிடிவாதமாய் இருப்பவர்கள் --

மிகவும் சிரமம்

இவர்களிடம் பேசாமலே இருந்துவிடலாம்.என்னோடு ஒத்த கருத்துகள் உள்ளவர்கள்

நல்லவர்கள் வல்லவர்கள் --

ஆனாலும் எதைப் பேசினாலும்

நானும் ஆமோதிக்கிறேன் என்று

ஒத்து ஊதினால்

அதற்கு மேல் பேச என்னதான் இருக்கிறது?ஆகக்கூடி எனக்கு தேவையானவர்கள்

சிறிது நேரமேனும்

எனக்கு எதிராய் பேசி

முடிவில் என்னிடம் தோற்றே ஆகவேண்டிய

இனிதான நட்புகள்....அதுவே

ஆயின் .....தொடர்பு கொள்க.

Thursday, June 17, 2010

தன்னைத்தானே எழுதிக்கொண்ட கவிதை

கவிதை தன்னைத் தானே எழுதிக்கொள்ளும்


கவிதைவரிகள்

பத்துபேருக்கு...

பத்துவிதமாய் புரிதலில்

கவிதை பல தளங்களில் வாழ்கிறது

கவிஞனின் எண்ணம் தாண்டியும்

வார்த்தைகள் பலவண்ணம்

கொள்ளும்போது

கவிதை தன் மோட்சத்தை அடைகிறது.

நேற்று படித்த ஞாபகம்.

இன்று ....

வரிகள் பத்தை பொறுக்கி எடுத்து

கலயம் தேடி குலுக்கிப் போட்டு

வரிசையாய் எடுத்து எழுதப்போகிறேன்

பலதளம் வாழும் கவிதை ஒன்றை.பத்துபேர் பத்துவிதமாய் அர்த்தம் கொள்ள...தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் கவிதைகளும்

தன்னைத்தானே வரைந்து கொள்ளும் ஓவியங்களும்

நன்றாகத்தான் இருக்கிறது.வார்த்தைகள் தேடியும்

கருத்துகள் புனைந்தும்

ஏனிந்த கஷ்டம் ???

சந்தம் சொல்லும் வார்த்தைகளை

பொறுக்கிப்போடும்

சாப்ட்வேர் கிடைக்கட்டும்.

யோசிப்பது மிச்சமாகும் .--

Wednesday, June 16, 2010

என்னைபார்த்து நானே வியந்துதான் போகிறேன்

வெகு அழகாய் உருவம்


உலகை உள்வாங்கும் அறிவு

அவ்வறிவை வெளிப்படுத்தும் ஆற்றல்

பகைமை கொள்ளாத  நேசம்

சார்ந்து விடாத பாசம்

ஆமாமாம்

என்னைபார்த்து நானே வியந்துதான் போகிறேன்கருத்தான விவாதங்கள்

அறிவு ததும்பும் நட்புகள்

பிறர்க்கு உழைக்கும் பேச்சுக்கள்

வெகுசிலரே படிக்கும் நூல்கள்

என்று என் உலகம்

மிகவும் உயர்ந்ததாய் இருக்கிறது !!உதவி செய்யும் கரங்கள்

மன்னிக்கும் மனது

ஓயாத உழைப்பு

தாராள சிரிப்பு

ஆம் ...இந்தப் பெருமை அளப்பரியதாயிருக்கிறது.நான் எனும் மூர்க்கம்

பாம்பைப்போல் சீற்றம்

தனிமை என்னும் பாரம்

உறுதி எனும் வாழ்வு

உயர்வு பெருமை வியப்பு ஏதுமில்லைகண்கள் நிலைக்கிறது

வெளி, வெளி பெருவெளி

ஏதுமில்லாப் பெருவெளி

Friday, June 11, 2010

டீ - கால தத்துவங்கள்

சாயங்கால வானம் பார்த்து

டீ அருந்தினால்

-----அழகியல்குடித்ததும் நானே அதை

கழுவி கவிழ்த்தால்

------இருத்தலியல்தூளும் பாலும் சர்க்கரையும்

சேர்ந்து டீ உருவானால்

-------வேதியியல்அடுப்பை பற்ற வைத்தலால்

வெம்மை உருவானால்

-------இயற்பியல்அடுப்பு பற்ற வைக்குமுன்

விளக்கேற்றி

கைகளை குவித்தால்

--------கடவுளியல்கைகளை குவிக்கக்கூடாது

என்பதை நினைத்துக்கொண்டால்

--------கடவுள் இல்லா இயல்கைகளை குவிக்கக்கூடாது

என்பதை தீவிரமாக நினைத்துக்கொண்டால்

--------பெரியாரியல்கைகளோ, விளக்குகளோ

ஞாபகமே இல்லாவிட்டால்

---------

---------

--------- அது.... மறதியியல்.

Thursday, June 10, 2010

விக்ரமாதித்தனின் அரியணைகள்

அரியணை மேலிருந்து

தர்ம புத்தி கொண்ட

குருவியோட்டிக்கும் எனக்கும்

பெரிய வித்யாசமில்லை.அரியணையில் ஏறுவதும் இறங்குவதுமாகவே

ஒவ்வொரு பொழுதும் கழிகிறதுஅரியணை இன்பம்

புரியாத மயக்கம்

எப்பொழுதும் தொடர்கிறதுஇறங்கின இன்பம்

புரியாத மயக்கம் கூட

அவ்வப்போது தொடர்வதுண்டு.எல்லோருக்கும் கிடைத்திருக்கும்

கூடவே தூக்கித்திரியும் படியான

விக்ரமாதித்தனின் அரியணைகள்.(குருவியோட்டி அரியணை இருந்த பூமியில் நின்றபோது, சுற்றிலும் நல்லதும், இன்பமும் கண்டான், அரியணை விட்டு நகர்ந்த போதோ தன்னை மட்டுமே கண்டான்)

Friday, May 28, 2010

கூடாதெனப்பட்ட தேவைகள்

எதுவெல்லாம் கூடாதென்று

எழுதிவைத்தார்களோ

அவையெல்லாம் எனக்குத்

தவறாமல்

தேவைப்படுகிறதுநிறைய நேரங்களில் கோபம் தேவையாய் இருக்கிறது

குனிந்த தருணம் பார்த்து மிளகாய் அரைக்கும் ஜென்மங்களின் மீது

அவ்வப்போது காமமும் தேவையாய் இருக்கிறது

புருஷனின் தேவைக்கு பரிமாறவோ அன்றி,

காலத்தின் அரிப்புக்கு பதில் சொல்லவோ ...

ரகசியமாய் கொஞ்சமேனும் பொறாமை இல்லாவிட்டால்

முன்னேறித் தொலைவது எப்படி?

வம்பு பேசத் தெரியாத வாய்,

உலக விஷயம் மட்டும் எப்படி பேசிக் கிழிக்கும்?

கொஞ்சமேனும் சண்டை போட முடியாவிட்டால்

எல்லா தவறுக்கும் நான் மட்டுமல்லவா காரணமாகிப் போகிறேன்.இவையெல்லாம் மட்டுமின்றி

கொஞ்சம் சாத்தான், கொஞ்சம் பேய்த்தனம்

கொஞ்சம் வெறுப்பு, கொஞ்சம் கலகம்

கொஞ்சம் வஞ்சம், கொஞ்சம் ஏய்ப்பு

என்று லிஸ்ட் போட்டு சேகரித்துக்கொண்டிருக்கிறேன்ஆகையால்

எதுவெல்லாம் கூடாதென்று

எழுதிவைத்தார்களோ

அவையெல்லாம் எனக்குத்

தவறாமல்

தேவைப்படுகிறதுநல்ல பையனாய் வளரச்சொல்லி

முன்னோர் சொல்லித்தந்து

நானும் சொல்லி வந்த கதைகளையெல்லாம்

திரும்பப்பெற முடிவு செய்து விட்டேன் ..

ஆம் !

நல்ல ஆன்மாவென்று

பெயரெடுப்பதைக் காட்டிலும்

வாழ்ந்து விடுவது முக்கியமாகிறது.

ஆசைப்படியும், சாமர்த்தியமாயும்

வாழ்ந்து விடுவது

மிக மிக முக்கியமாகிறது...எதிர் காலத்துக்கு விட்டுச்செல்லலாம்

ஆசைப்படி வாழ்வதே வாழ்வின் சித்தாந்தம் என்று,

சொல்லப்போகும் கதைகளை !ஆகையால் .....

எதுவெல்லாம் கூடாதென்று

எழுதிவைத்தார்களோ

அவையெல்லாம் எனக்குத்

தவறாமல்

தேவைப்படுகிறது !!

Wednesday, May 26, 2010

முகமூடியும் சௌகர்யமும்

பிறரை வருத்துதல் கூடாது

என்பது புரிந்த நிமிடத்திலிருந்து

முகமூடி அணிவது வழக்கமாகிவிட்டது !நல்ல மனசு என்று

பிறர் சொல்வதற்காகவும்

சில காரியங்களை

சாதித்துக்கொள்ளவும் கூட

அது பயன்படவே செய்கிறது.ஆனாலும்....நான் முகமூடி அணிந்துள்ளேன்

என்று சொல்வதைவிடவும்

எனை சரியாய் பார்க்கும் வல்லமை

பிற கண்களுக்கு இல்லை

என்று சொல்வதில்

மனசுக்கு இன்னும் சௌகர்யம்தான் !

Tuesday, May 11, 2010

தற்செயலாய் ......

தற்செயலாய் தோன்றி


தற்செயலாய் சுழன்று

தற்செயலாய் கரையும்

இந்த பிரபஞ்சத்தின் ...தற்செயலாய் பிறந்து

தற்செயலாய் வளர்ந்து

தற்செயலாய் இறக்கும்

மனிதம் .......


தற்செயல் குறித்து

சிந்திக்கவும் செய்கிறது

தற்செயலாய் ......

Friday, May 7, 2010

காத்திருப்பின் மேற்படிந்த சாம்பல்

இப்போதெல்லாம் காத்திருப்பதைத்தவிர

வேறு வேலையே இல்லை !!பொழுது விடிவதற்கும்

பொழுது கவிவதற்கும்

காத்திருக்க வேண்டி இருக்கிறதுபசித்திருப்பதற்கும்

பசியின்றி இருப்பதற்கும்

காத்திருக்க வேண்டி இருக்கிறதுயாரேனும் ஜோக் சொல்வார்களா

சற்று சிரிக்கலாம் என்றேனும் ....

யாரேனும் புலம்புவார்களா

சற்று அட்வைஸ் செய்யலாம் என்றேனும் கூட

சில காத்திருப்புகள் கழிகிறது.ஜோக்கோ, சிரிப்போ

புலம்பலோ, அட்வைசோ

இல்லை கடும் கோபமோ

எதுவாயினும் ....அவையனைத்தும்

காத்திருப்பின் மேற்படிந்த

சாம்பலே,

எனும் உண்மையில்

எந்த மாற்றமும்

இப்போதைக்கு இல்லை.

Wednesday, May 5, 2010

உலகம் வேறுமாதிரி இருக்க வேண்டுமென்று எல்லோருக்கும் ஆசை !!!

உலகம் வேறு மாதிரி


இருக்க வேண்டுமென்று

எல்லோருக்கும் ஆசைவெறுப்புகள் மறைய வேண்டுமாம்

அன்பு மலர வேண்டுமாம்

வாழ்வு செழிக்க வேண்டுமாம்

அமைதி நிலவ வேண்டுமாம்உலகம் வேறுமாதிரி

இருக்க வேண்டுமென்று

எல்லோருக்கும் ஆசைநிறைய பணமும் சொத்தும் வேண்டுமாம்

கடலில் கூட மண்ணைக்கொட்டி

நிலம் செய்து வீடு கட்டும்

வசதி வந்து சேர வேண்டுமாம்உலகம் வேறுமாதிரி

இருக்க வேண்டுமென்று

எல்லோருக்கும் ஆசைசாகாது இருக்க வேண்டுமாம்

நோயில்லாத உடல் வேண்டுமாம்

வலி என்பதே இல்லாதிருத்தல் வேண்டுமாம்

உண்மையை காணும் வகை வேண்டுமாம்உலகம் வேறுமாதிரி

இருக்க வேண்டுமென்று

எல்லோருக்கும் ஆசைஎல்லோரும் சண்டை போடுகிறார்கள்

எல்லோரும் திட்டுகிறார்கள்

எல்லோரும் ரத்தம் சிந்துகிறார்கள்

எல்லோரும் சலித்துக்கொண்டே

ஏதேனும் செய்துகொண்டே இருக்கிறார்கள்

உலகத்தை மாற்றியே தீருவதென்று..ஆமாமாம் .....

உலகம் வேறுமாதிரி

இருக்க வேண்டுமென்று

எல்லோருக்கும் ஆசை !!!

Saturday, May 1, 2010

இடைவிடாமல் ...


கற்றதை நினைவில் வைத்து 
மேற்கோள் காட்ட முடியவில்லை 

இலக்கியத்தின் 
தொலைந்த வார்த்தைகளை 
மீட்டெடுத்து 
கவிதை நயம் பின்னத் தெரியவில்லை 

உலகின் வன்மம் பார்த்து 
கோபம் கொள்ள முடியவில்லை 

உலகையே காப்பேன் என்று 
உறுதி பூண முடிவதில்லை ..


ஆயினும் எழுதத்துடிக்கும் 
விரல்களுக்குப்பின்னே 
மேகத்தின் பின் மறைந்த
சூரியன் போல் 

அன்பையும் வெறுப்பையும் தாண்டின 
ஏதோ ஒன்று 
ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது
இடைவிடாமல் ....

-- 

Wednesday, April 28, 2010

காத்திருத்தல்


உனக்கு அனுப்பின என் கவிதை
குறித்து
நீ ஏதும் சொல்வாயென
சில சமயம் காத்திருந்ததுண்டு.
 
ஆனாலும் இப்போது தெரிகிறது
அபிமானத்தால் விளைந்த
உனது கருத்து தேவையில்லை என்பது.
 
அபிமானம் கொண்ட உன் கண்கள்  மட்டுமின்றி 
கவிதை படிக்கிற
எந்த கண்களும் கவிதையை 
உயர்ந்ததாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ
அளவிட முற்படுகிறது
(நன்றாயிருக்கிறது என்றோ அல்லது அப்படி இல்லை என்றோ )
.
 எல்லாத் தருணங்களிலுமோ 
அல்லது ஏதேனும் ஒரு தருணத்திலோ
உயர்ந்ததும் தாழ்ந்ததும் ஒரு தளத்தில்
சந்தித்து விடுவதை வழக்கமாகவே கொண்டிருக்கின்றன.

அவை தமக்குள் சந்தித்து 
வெறுமையை உண்டாக்குகிற 
அதே நேரத்தில் , 
என் கவிதையின் சாரமும் 
அதற்குள் தொலைந்து விடுவதை 
மறுப்பதற்கில்லை. 
 
ஆகவே, கவிதை பற்றின
உன் கருத்து குறித்து இப்போது மட்டுமல்ல ...
எப்போதுமே காத்திருக்கத் தேவையில்லை.Monday, April 26, 2010

நண்பகற் புழுதி


வேலையின்றி சோம்பியிருந்த
ஒரு நாளின் பகற்பொழுதில்
தலைக்கு மேல் தென்னங்கீற்றும்
அதற்கு மேல் வானமும் தென்பட
உடலை தாங்கின கட்டிலும்
மொத்தமாய் தழுவின தென்றலுமாய்
கிறங்கின வேளையில்,
 
ஓடிவந்த என் குழந்தை எத்தியதில்
தெறித்தது அருகிருந்த மண்மேடு.
 
புழுதியாய் படலம்..
மாவுபோல் மண்துகள் ,
சற்று பெரிதாக சிறு கற்களும்,
ஆங்காங்கு கலந்த குப்பைகளும்,
மரத்துகள்கள், இலை துணுக்குகள்
சில குச்சிகள் 
சிறிதும் பெரிதுமாய் ...
 
மண்மேட்டிலிருந்து விடுபட்டு 
எதை  நோக்கியோ அவை பறப்பவை 
போலிருந்தன.
ஒன்றை ஒன்று விட்டு விலகுவது  போலும்   
தோற்றமளித்தன
மேட்டிலிருந்து விடுபட்ட வேகத்திலோ
அல்லது மகிழ்ச்சியிலோ
அவை சுழன்றாடின.
 
சில அருகிலும் சில தூரத்திலுமாக
மிக மிக அருகில் இருந்து பார்த்தபோது
அவை காலம் காலமாக,
காலமில்லா காலம் தொட்டு
இருந்தாடிக்கொண்டிருப்பவை
போலும்கூட தோன்றலாயின.
 
எல்லாம் சில நொடிகள்தான் ...
கண்ணை மூடித்திறந்த போது ..
எழுந்த புழுதி, பறந்து, விரவி
மற்றோர் இடத்தில் விழுந்திருந்தது.
மீண்டும் மண் தரையினூடே
கலந்தும் இருந்தது.
 
குழந்தை கடந்தோடிய பின்
வெயிலும், தென்னையும்
காற்றும், கட்டிலும்
நானுமாய் .......
 

Thursday, April 22, 2010

டீ கெட்டிலின் அகிலம் 
அழகாய் கவிந்து கொண்டிருக்கிறது மாலை !
கெட்டிலில் தண்ணீருடன் சேர்ந்து
டீத்தூளும் கொதிக்கிறது
மனம் நாசியை வருடுகிறது
அதில் லயித்து
சுவரில் வாகாய் சாய்ந்து
கொதித்தலை வெறிக்கிறேன்.
 
சிறு சிறு கருக்கோளங்கள் 
சில தனியாய் அலைந்தபடி
சில ஒட்டி உறவாடியபடி
சில அவ்வப்போது இணைந்தும் விலகியும்
சில அவ்வப்போது உரசியும், மோதியும்
மற்றும் சிலவோ எப்போதும் கும்பலாய்
மிதந்து நகர்ந்தபடி
அவை ஒரு ஒழுங்கில் பயணிப்பது போலக்கூடத் தோன்றுகிறது.
 
வேடிக்கைதான் !!!
 
அடுப்பின் வெம்மையை கூட்டிப்பார்க்கிறேன்
பிறகு சிறிது குறைத்தும் பார்க்கிறேன்.
அவை முதலில் வேகமாகவும்
பிறகு மெதுவாகவும் நகர்கின்றன.
முற்றிலும் அடுப்பை அணைத்தபோது
கனம் தாங்காதவை போல
கெட்டிலின் ஆழத்திற்கு சென்று
கூட்டமாய், மொத்தமாய் அமர்ந்து கொண்டன.
 
நானும் அவற்றை எனது டீயிலிருந்து வடிகட்டி
குப்பையில் எரிந்து விட்டு...
பாலும் சர்க்கரையும் கலந்து
மாலையோடு கை கோர்த்து
டீ அருந்த துவங்குகிறேன். 

Friday, April 16, 2010

அப்படியும் இப்படியும் எப்படியும் !!!

கொஞ்சம் இப்படியும் இருக்குமடி உலகம்


நெனைச்சு அப்படியும் இருக்குமடி உலகம்

எப்படியும் நடக்குமடி உலகம் -தெரிஞ்சும்

எப்படியும் நடக்குமடி உலகம் .

கோடு போட்டு நிக்காதடி உலகம்

பெரிய ரோடு போட்டும் போகாதடி உலகம்

புத்தனையும் பாத்ததடி உலகம்

பல சித்தனையும் பாத்ததடி உலகம்

ஏசுவோ, அல்லாவோ

ஹிட்லரோ, நீட்சேவோ

வீரப்பனோ, ஒபாமாவோ

நீயுமோ, நானுமோ...

அத்தனையும் பாக்குதடி உலகம் ....

அதையும் நிக்காம பாக்குதடி உலகம் ...

கயிறு போட்டு தண்ணியத்தான் கட்டப்பாக்குறான் -மனுஷன்

காத்த புடிக்க வலையத்தான் வீசிப்பாக்குறான் .

இல்லாத தூரத்த அளந்து பாக்குறான் -மனுஷன்

கைக்குள்ள அகிலத்த அடக்கப் பாக்குறான்

போற வழி வர்ற வழி போட்டு வைக்கிறான்-அதுவும்

திரும்பும்போதே மறைஞ்சு போக மலைச்சு போகுறான் ..

இப்படித்தான் இருக்கணும் ....

அப்படித்தான் இருக்கணும் ....

மனசு கெடந்து அடிக்குதடி

காலம் முழுசும் ....

இப்படின்னும் இல்லாம ...

அப்படின்னும் இல்லாம ...

எப்படியும் இருக்குதடி இந்த உலகம் ...

அதில ....

எப்படியும் இருந்துக்கடி காலம் முழுசும் ...

அகில ...

உலகத்தோடு ஒத்துப்போடி சாகும் வரைக்கும் .....

Thursday, April 15, 2010

சிரித்துக்கொண்டே இருக்கிறது ....

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......(கால நதி )

இதுதான் இலக்கியம் என ஒரு கூட்டம் 
இதுதான் மதம் என மறு கூட்டம் 

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

இப்படித்தான்  வாழ்க்கை என ஒரு வழி 
அப்படித்தான்  வாழ்க்கை என மறு வழி 

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

இதுதான் மனிதம் என ஒரு வழக்கு 
இது ஒரு மிருகம் என மறு வழக்கு ..

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

உனக்கு ஒரு நியாயம் 
எனக்கு ஒரு நியாயம் 
மற்ற அனைவர்க்கும் ஒரே நியாயம் ..

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

இது புனிதம் 
இது குப்பை 
இது மேதமை 
இது மடமை
இது கடவுள் 
இது சாத்தான் 
இது மோட்சம் 
இது நரகம் 
இது பாவம் 
இது புண்ணியம் 
இது கல் 
இது உயிர் 
நீ நீ ...
நான் நான் ... 

வரையறை இல்லா உலகில் ...
வரையறை கற்கும்  மனிதம் 
விதிகளே இல்லா வீதியில் 
விதிகளை விதிக்கும் மனிதம் ...

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

சிரித்துக்கொண்டே இருக்கிறது ....

Thursday, April 1, 2010

சாக்காடு தேடிவரும் !!

வந்தது கருவுல


போறது எதுவர?

யாருக்கும் தெரியல

தேடலும் நிக்கல !!!நேத்து நடந்தது

நாளைக்கு நடப்பது

ஏன்னு தெரியணும்

எதுக்குன்னு புரியணும் !அன்பு வச்சாலும் கேள்வி

வைக்காட்டியும் கேள்வி

நம்புனாலும் கேள்வி

நம்பாட்டியும் கேள்வி !காசு வந்தாலும் கேள்வி

வராட்டியும் கேள்வி

செத்தாலும் கேள்வி

சாக அடிச்சாலும் கேள்வி !ஒருநாள் பொழப்புக்கு

யோசிச்சவன் முட்டாளு

பலநாள் பொழப்புக்கு

யோசிச்சவன் புத்திசாலி !ஆயுளுக்கும் சேத்துவச்சு

யோசிச்சவன் அறிவாளி

யுகத்துக்கும் பொறுப்பெடுத்து

யோசிச்சவன் ஆன்மீகி !இந்த நொடி சந்தோஷத்தை

ஒருநாளும்,  பலநாளும்

ஆயுளும், யுகமுமாய்

யோசிச்சு தொலைச்சுட்டு,என்ன பேரெடுத்தா

யாருக்கு என்ன வரும்?

அலுப்பும் சலிப்பும்தான்

சாக்காடு தேடிவரும் !

Monday, March 29, 2010

உன் பார்வையில் ஒரு விடியல்

உன் பார்வையில் ஒரு விடியல்


கருவானின் செரிந்தடர்ந்த

விண்மீன்களான

என் எண்ணங்கள்

உன் முக சூரியன் கண்டதும்

வெளிர்ந்தன....வாழ்வின் சூட்சுமம் !!

என் வாழ்வின்

நிமிடங்கள் அனைத்தும்

நியாயமாக்கப்பட்டவை.

அது இல்லாத தருணங்களில்

நான் இறந்திருக்கக் கூடும். ...

அன்பைத் தேடி ...

அன்பே சாஸ்வதமென்று

புரிந்தும், அறிந்தும்

தேடுகிற வாழ்க்கையில் ....

என் தேடல் உயர்ந்தது....

உனக்காக செலவிட

எனக்கு நேரமில்லை !!வித்தை

நீ என் வாழ்வு

நீ என் பயணம்

நீயே என் உயிர் ....

என் விருப்பம் புரிந்து நடந்து கொள் ....

பிளாட்பாரம் முதல் பாரக் ஒபாமா வரை

கவலையற்ற பிளாட்பார  தூக்கம் :
அதிர்ஷ்டமில்லா முட்டாளோ, சோம்பேறியோ?
அறிவால், உழைப்பால் வந்த
வீடும் பணமும் எனக்கு !

என்ன அழகு ! உலக அழகி !:
அங்கில்லாத ஆன்ம சந்தோஷம்
என்னிடத்தில் எப்போதும் உண்டே !!

சச்சின் ஒரு சகாப்தம் :
என்ன இருந்தாலும் உயரத்தில்
குறைச்சல்தான் என்னைவிடவும்  !!!

நோபெல் பரிசு , வென்றார் விஞ்ஞானி :
என்ன ஆராய்ந்தாலும் கடைசியில் மண்ணுக்கு
வாழ்வை அனுபவிக்கனும்
எப்போதும் என்னைப்போல் !!!!

ஆதர்ஷ தம்பதி :
எல்லாம் நடிப்பு ,
உள்ளே இருப்பது வெளியில் தெரியுமா ?
எப்ப வேணாலும் புட்டுக்கும் !!!!!

"அகம் பிரம்மாஸ்மி "- தன்னை  உணர்ந்தவர்:
யாரோ சொன்னதை திருப்பிச் சொல்லும்
நாடக கிளிகள் !!!!!!

பில்கேட்ஸ்,  அம்பானி :
அதிர்ஷடத்தால் உயரம் போனார் ,
எனக்கு  கிடைத்திருந்தால் தெரிந்திருக்கும் சேதி  !!!!!!!

பாரக் ஒபாமா  :
டீக்கடையில் டீ குடிச்சு,  நெனச்ச இடம் தூங்க
அவரால முடியுமா ???????

எப்படி பார்த்தாலும்
ஒரு "மாற்று  " அதிகம்தான்
 நான் !!


(எதிலும் தான் என்கிற நான்)மீண்டும் ஒரு தலைமுறை ....

பூட்டன் ஒன்று
முப்பாட்டன் பத்து
தாத்தன் நூறு
அப்பன் ஆயிரம்
மகன் பத்தாயிரம்
அவன் மகன் நூறாயிரம்
இன்னும் இன்னும் ஆயிரங்கள் ...

கருவில் பிறந்து
கண்ணைத் திறந்து....
அடித்துப் பிடித்து
ஆறடி வளர்ந்து...
முட்டி மோதி
மெத்தப்  படித்து...
உருகி உடைந்து
காதல் புணர்ந்து ...
துரத்தி வருத்தி
செல்வம் குவித்து ..
வானம் பார்த்து
கேள்விகள் கேட்டு ...
உழைத்து சலித்து
புகழைத் தேடி ...
ஆயிரம் அர்த்தம்
கண்டு தொலைத்து .....
களைத்து தேய்ந்து
மண்ணில் கரைய ....

மீண்டும் ஒரு தலைமுறை ....

Saturday, March 27, 2010

பிறந்துவிட்டது

அலையலையாய் எழுத்துக்கள் 
கண்வழியே அசைந்தாடும்
இல்லாத கவிதைகள் 
மனசுக்குள் கூத்தாடும் 

புரியாத ராகங்கள் 
உதடுகள் முணுமுணுக்கும்
விரல்கள் கீபோர்டில் 
நில்லாது தாளமிடும் 

காதோர குரலொன்று 
விடாது ஆர்ப்பரிக்கும் 
படைத்தலின் தாகம் 
சந்தோஷ கூச்சலிடும் 

ம்ம்  ...பிறந்துவிட்டது கவிதை .

-- 

ஒன்றுபோல ... ஆனால் விசித்திரமான ...எழுதுகிறோம் 
எழுதத்  தயங்குகிறோம் 
படிக்கிறோம் 
பொறுக்கிப்  படிக்கிறோம் 
தேடுகிறோம் 
அவ்வப்போது விடுகிறோம் 
கட்டுகிறோம் 
மீண்டும் தளர்த்துகிறோம் 

உன்னுள்ளும் ஆசை 
என்னுள்ளும் ஆசை 
உனக்கு என் மனம்  தொட 
எனக்கு உன் மனம் தொட 

எனக்கும் உண்மை பிடிக்கிறது 
சோம்பல் கொண்ட பொய்யும் பிடிக்கிறது 
எல்லாவற்றுக்கும் கேள்வியும் இருக்கிறது 
வாழப்போதுமான பதிலும் இருக்கிறது 
உன்னைப் போலவே ...

எங்கேயும் வழிகிற 
தெய்வதம் 
உன்னுள்ளும் வழிகிறது 
என்னுள்ளும் வழிகிறது 
நெகிழ்ந்து போன தருணத்தின் 
பரவச வார்த்தைகள் ....

எல்லாம் ஒன்று போல ....

ஆனாலும் உன்னை 
கண்கள் எப்போதும் நோக்கும் 
"விசித்திரமென"
"புரிய முடியா விசித்திரமென"  ...

(எழுத்தின் நோக்கம் புரிய தேவையான பின் குறிப்பு : எல்லோரும் ஒன்று போல என்கிற ஒருமை தத்துவத்தை உலகம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் எல்லோரும் பிரிந்து நிற்கிற முரண்.... )

Monday, March 15, 2010

நான்,..சின்ன சித்திரம்

எனக்காக எழுதுங்கள் ....

"மகிழ்ச்சியோடு என்றென்றும்" வாழ்ந்து முடிக்கும் கதைகளை

எனக்காக வரையுங்கள் ...

இடையழகும் , மார்பழகும் கொண்ட நவரச பதுமைகளை

எனக்காக செதுக்குங்கள் ...

இடை குறுகி, தோள் விரிந்த ஆணழகை ...

எனக்காக பாடுங்கள் ...

காதல் ததும்பும் பாடலொன்றை ..

எனக்காக செய்யுங்கள்

கலவி கொண்ட காதலினை

எனக்காக வாழ்ந்திடுங்கள்

குறைவில்லா வாழ்வதனை ....முருங்கை வாழ்வு ..இல்லாத இடையும், மார்பும்

கையெட்டாத ஆணும், அழகும்

சொட்டாத கலவி ரசமும்

கைவிட்ட வாழ்வே வாழ்வு .....

என் காலை வெட்டி நட்டுப்பார்த்தேன்

குழந்தை முளைக்கவில்லை.

மனதை வெட்டி மண்ணில் புதைத்தேன்

வாழ்வு முளைக்கிறது.


வளர்ச்சி குன்றிய மக்கள். இருபது வயதிலும் ஐந்து வயது உருவம்.
பிறப்பு உறுப்புகள் வளர்ச்சி அடைவதில்லை. மூளை மட்டும் அதன் தன்மையில் வளர்கிறது. பக்குவம் அடைகிறது.

பக்குவம் அடைய சிரமம் கொண்ட உயிர்கள் இயலாத வேதனையில் துடித்து, வன்முறையில் இறங்குவதை காட்டுகிற படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. ("orphan") அத்தகைய ஒருவரை நேரில் பார்த்து அருகில் இருந்த வாய்ப்பு கிடைத்த போது ....அவரின் உணர்வுகள் ..என் கை வழியே பாய்ந்தோடி இதயம் தொட்ட போது ....வழிந்த உணர்வுகளை பதித்துள்ளேன்.

Thursday, March 11, 2010

எண்ணங்கள் இல்லா கவிதை

கவிதை எழுதென்று


கண்மண் தெரியாத ஆணை.

கேட்ட மொழியிலெல்லாம்

வார்த்தைகள் ஓடிவந்து

சப்பணம் போடுகிறது.

கேட்காத மொழியின்

சப்தங்களெல்லாம்

சரிக்கு சரி வந்து நிற்கிறது.

கண்ணிமை மட்டும்

கொட்ட கொட்ட

முழிக்கிறது ...

எண்ணங்கள் என்பதை

எங்கேயும் காணோமென்று !!!

அவள்.....

அவள்.....


சுழித்தோடும் மரகதம்.

தழுவிடும் மரப்பாலம்.

குளிர்ந்தது மர நெஞ்சம்.

விரகம் கொஞ்சம் மிஞ்சும்.வெண்மணல் தொட்டாடும்,

புற்கீற்றை இழுத்தாடும்.

ஏங்கி நின்ற பாறைதனை

மோகத்தில் முழுக்காட்டும்...கண்மலர பார்க்க விட்டு

இதழ் சுழித்து பாய்ந்தோடும்.

கண்மூடி வசமிழக்க

ஸ்ருங்கார பாட்டிசைக்கும்ஏனோ..மோதிவரும் காற்றோடு மட்டும்

நில்லாது சரசமிடும் !!

சாந்தினி

நானும் அவளும் ...

மறு கரையில்லா மழையாய் ..நான்


பெருங் கரையிட்ட குளமாய் ...அவள்

மோதிப் பிளக்கிற புயலாய் ..நான்

கை வீசி நடக்கிற காற்றாய் ...அவள்கொதிக்கும் நெருப்புச்சிறகாய் ...நான்

வருடும் மயிலிறகாய் ...அவள்

இன்றே சாகும் துடிப்பில் ...நான்

என்றும் வாழும் விருப்பில் ...அவள்சாந்தினி

வசந்தம் வருகிறது ....

வசந்தம் வரப்போகிறது இன்னும் சில வாரங்களில் ...
எப்போதும் பிடிக்கிற வசந்தம் ..
வாசத்துடன் வருகிற வசந்தம் ....
மழையை குடித்து சந்தோஷ பூ பூக்கும் மலை வெளிகள்..
எனக்குள் வாவென்று பல சிர கரங்கள் கொண்டு அழைக்கின்றன.
பாறைகள் படர்ந்து, கற்கள் உருண்டு கிடக்கும்
புல்வெளிகளால் அவை நிறைந்துள்ளன..
ஆங்காங்கு நிறுத்தி வைத்த பல கைகள் கொண்ட கம்பங்களாக
காக்டஸ் மரங்கள்....
ஒவ்வொரு மழைக்கும் வானம் நிறைய வாசம் நிரப்பும்
க்ரியோசொட் புதர்கள் ....
சிறு மழைக்கும் நெளிந்தோடும் சிற்றோடைகள் ...
பூக்களையும் அவ்வப்போது என்னையும் நெடுநேரம்
எதிர்கொள்ளும் ஹம்மிங் பறவைகள்....
மெலிதாய் சூடேறும் காற்று,
அதிகாலையில் குளித்த ஈரத்தின் சுவடுகளை
கழுத்தின் ஓரமாய் வருடிச்செல்லும் ...
ஆம் வசந்தம் வருகிறது .....என் வாசல் தேடிக்கொண்டு ...

Wednesday, March 10, 2010

இன்ன பிறவும்.....

இன்ன பிறவும்.....


என் தோழி ஒருவர் கேட்டார்...

அதையே கணவரும் வழி மொழிந்தார் ......

ஏன் உங்கள் கவிதைகள் சோகமாய் தொனிக்கின்றன என்று ...

தேடல் சோகம்தான்...

கிடைத்தவற்றில் களி மிகுமோ?

எழுதிதான் பார்ப்போமே......

குடம் நிறைந்ததா

நிறைக்குமா என்று .....