Monday, April 26, 2010

நண்பகற் புழுதி


வேலையின்றி சோம்பியிருந்த
ஒரு நாளின் பகற்பொழுதில்
தலைக்கு மேல் தென்னங்கீற்றும்
அதற்கு மேல் வானமும் தென்பட
உடலை தாங்கின கட்டிலும்
மொத்தமாய் தழுவின தென்றலுமாய்
கிறங்கின வேளையில்,
 
ஓடிவந்த என் குழந்தை எத்தியதில்
தெறித்தது அருகிருந்த மண்மேடு.
 
புழுதியாய் படலம்..
மாவுபோல் மண்துகள் ,
சற்று பெரிதாக சிறு கற்களும்,
ஆங்காங்கு கலந்த குப்பைகளும்,
மரத்துகள்கள், இலை துணுக்குகள்
சில குச்சிகள் 
சிறிதும் பெரிதுமாய் ...
 
மண்மேட்டிலிருந்து விடுபட்டு 
எதை  நோக்கியோ அவை பறப்பவை 
போலிருந்தன.
ஒன்றை ஒன்று விட்டு விலகுவது  போலும்   
தோற்றமளித்தன
மேட்டிலிருந்து விடுபட்ட வேகத்திலோ
அல்லது மகிழ்ச்சியிலோ
அவை சுழன்றாடின.
 
சில அருகிலும் சில தூரத்திலுமாக
மிக மிக அருகில் இருந்து பார்த்தபோது
அவை காலம் காலமாக,
காலமில்லா காலம் தொட்டு
இருந்தாடிக்கொண்டிருப்பவை
போலும்கூட தோன்றலாயின.
 
எல்லாம் சில நொடிகள்தான் ...
கண்ணை மூடித்திறந்த போது ..
எழுந்த புழுதி, பறந்து, விரவி
மற்றோர் இடத்தில் விழுந்திருந்தது.
மீண்டும் மண் தரையினூடே
கலந்தும் இருந்தது.
 
குழந்தை கடந்தோடிய பின்
வெயிலும், தென்னையும்
காற்றும், கட்டிலும்
நானுமாய் .......
 

4 comments:

  1. காட்சி அப்படியே மனக்கண்ணில் விரிகிறது..

    ReplyDelete
  2. அருமையா இருக்குங்க

    அவை காலம் காலமாக,
    காலமில்லா காலம் தொட்டு
    இருந்தாடிக்கொண்டிருப்பவை

    இப்படி நினச்சா கொஞ்சம் nostalgica இருக்கு இல்லீங்க ?நாமும் அதில் பகுதியாய் இருந்திருப்போம்ன்னு

    ReplyDelete
  3. wonderful expression of words for a fraction of second action.

    ReplyDelete
  4. Thank you Rishaban, Padma and Uma.

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!