Thursday, April 22, 2010

டீ கெட்டிலின் அகிலம்



 
அழகாய் கவிந்து கொண்டிருக்கிறது மாலை !
கெட்டிலில் தண்ணீருடன் சேர்ந்து
டீத்தூளும் கொதிக்கிறது
மனம் நாசியை வருடுகிறது
அதில் லயித்து
சுவரில் வாகாய் சாய்ந்து
கொதித்தலை வெறிக்கிறேன்.
 
சிறு சிறு கருக்கோளங்கள் 
சில தனியாய் அலைந்தபடி
சில ஒட்டி உறவாடியபடி
சில அவ்வப்போது இணைந்தும் விலகியும்
சில அவ்வப்போது உரசியும், மோதியும்
மற்றும் சிலவோ எப்போதும் கும்பலாய்
மிதந்து நகர்ந்தபடி
அவை ஒரு ஒழுங்கில் பயணிப்பது போலக்கூடத் தோன்றுகிறது.
 
வேடிக்கைதான் !!!
 
அடுப்பின் வெம்மையை கூட்டிப்பார்க்கிறேன்
பிறகு சிறிது குறைத்தும் பார்க்கிறேன்.
அவை முதலில் வேகமாகவும்
பிறகு மெதுவாகவும் நகர்கின்றன.
முற்றிலும் அடுப்பை அணைத்தபோது
கனம் தாங்காதவை போல
கெட்டிலின் ஆழத்திற்கு சென்று
கூட்டமாய், மொத்தமாய் அமர்ந்து கொண்டன.
 
நானும் அவற்றை எனது டீயிலிருந்து வடிகட்டி
குப்பையில் எரிந்து விட்டு...
பாலும் சர்க்கரையும் கலந்து
மாலையோடு கை கோர்த்து
டீ அருந்த துவங்குகிறேன். 

No comments:

Post a Comment

என்ன சொன்னாலும் தப்பில்ல !!